நாம் உயிர்வாழ்வதற்கு, டாக்டர்களின் பணி அவசியம். தன்னலம் கருதாமல், சேவை செய்யும் இவர்களது பணி விலைமதிப்பற்றது. டாக்டர்களின் சேவைகளுக்கு நோயாளிகள் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மருத்துவத்துறைக்கு டாக்டர்கள் தங்களது அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையிலும் டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினம் அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மார்ச் 30ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது.
மேற்குவங்கத்தின் இரண்டாவதுமுதல்வராக பதவிவகித்தவர் மறைந்த டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராகமட்டு மல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். ஏழை மக்களுக்காக பல்வேறு மருத்துவமனை களை தொடங் கினார். இவரது சேவைகளை போற்றும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை 1ல் டாக்டர்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இவருக்கு 1961ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம்,அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு "பி.சி.ராய் தேசியவிருது' வழங்கப்படுகிறது. லட்சியம் பெரும்பாலான மாணவர்களிடம், "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்' என கேட்டால், "டாக்டர் அல்லது இன்ஜினியராக வருவேத லட்சியம்,' என கூறுவார்கள். ஆனால் அவர் களது லட்சியம் நிறைவேறு கிறதா என பார்த்தால் சந்தேகமே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மருத்துவ படிப்புகளுக்கான அரசு இடங்கள் குறைவு. எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்றும், பின்தங்கிய மாணவர்களால் மருத்துவ படிப்பை தொடர முடிவதில்லை. இதனால் டாக்டர்கள் அதிகளவில் உருவாவது தடைபடு கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அரசு இடங்களை அதிகரித் தால், டாக்டராக அதிகள விலான மாணவர்கள் உருவாக முடியும்.
மனிதாபிமானம்: வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். டாக்டர்கள் தங்களது பொறுப்புணர்ந்து, பணத்தை மட்டும் குறிக்கோளாகக்கொண்டு சிகிச்சையளிக்காமல், மனிதாபிமானத்தோடு சிகிச்சையளிக்க முன்வர வேண்டும்.
ஏழையின் சிகிச்சையில் "இறைவனை' காணலாம்: அர்ப்பணிப்பு டாக்டர்களின் "அனுபவங்கள்'
காலைத் தூக்கம் கலைந்து, கண்விழித்து பார்க்கும் காட்சி நல்லதாக, இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு. இதில் டாக்டர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. பாதி தூக்கத்தில் எழுப்பினாலும் கோபமின்றி, ரத்தத்துடன் வலியால் அலறும் நோயாளியைக் கண்டு பதட்டப்படாமல் சிகிச்சை அளிப்பது தெய்வ இயல்பு. பொறுமையான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தை, அன்பான சிகிச்சையினால், இறைவனுக்கு அடுத்த நிலையில், டாக்டர்களை போற்றி வணங்குகிறோம். இன்று உலக டாக்டர்கள் தினம். தங்கள் பணியின் அர்ப்பணிப்பு அனுபவங்களை நினைவு கூறுகின்றனர், சில டாக்டர்கள்.
* ஜி.துரைராஜ் (இருதய நோய் நிபுணர், மதுரை): 1976ல் பொதுமருத்துவராக பணியை துவங்கினேன். 1996 முதல் இருதய நோய் நிபுணராக உள்ளேன். இருதய நோய்க்கு சிறப்பு பயிற்சி பெற்ற பின், நான் சந்தித்த முதல் நோயாளியே சிக்கலான சூழ்நிலையில் இருந்தார். கையில் இ.சி.ஜி., குறிப்பை கொண்டு வந்திருந்தார். இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்த அடுத்த நொடி, அந்த 25 வயது இளைஞரின் நிலை மோசமாகி விட்டது. உடனடி மருத்துவ உதவி செய்து, உயிரைக் காப்பாற்றினேன். அவருக்கு வந்த இருதய நோய் கடுமையாக இருந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக சொன்னபோது, அதிர்ந்து விட்டேன். அவரது உடல்நிலையை எடுத்துச் சொன்ன போது, பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, திருமணமும் செய்து நலமாக உள்ளார். பெரும்பாலானோர் இருதயவலியை, வாயு தொந்தரவாக நினைத்து கவனிக்காமல் விடுகின்றனர். வாயு தொந்தரவில் வலி அப்படியே இருக்கும் அல்லது குறையும். இருதய வலியில் தொடர்ந்து அதிகரிக்கும். அதிகமாக வியர்க்கும்.
* இளங்கோ முனியப்பன் (பொது மருத்துவ டாக்டர், திண்டுக்கல்): 15 ஆண்டுகளாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறேன். சென்ற வாரம் கட்டுவிரியன் பாம்பு கடித்த இளைஞரை பேச்சு, மூச்சில்லாமல் அழைத்து வந்தனர் உறவினர்கள். வாலிபர் இறந்து விட்டதாக நினைத்து, கதறி அழுதனர். உடனடியாக மருந்தை செலுத்தி, செயற்கை சுவாசம் கொடுத்து இரண்டு நாட்கள் பேச்சு இல்லாமல் இருந்த வாலிபரை காப்பாற்றினேன். நலம் பெற்று கண்ணீர் மல்க என்னை வணங்கிய போது, நான் பிறவிப்பயன் பெற்றதாக நினைத்தேன். மற்ற தொழிலுக்கு நேர எல்லை உண்டு. டாக்டர் தொழிலுக்கு மட்டும் உயிர்களை காப்பாற்ற நேரம் காலம் கிடையாது. ஒவ்வொரு நிமிடமும் போராட வேண்டும். இதற்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன்.
* எஸ்.கேசவன் (கண் மருத்துவர், தேனி): 29 ஆண்டுகளாக பொதுமருத்துவத்திலும், கண் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாகின்றன. தேனியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி, பார்வையிழந்த நிலையில், தள்ளாடியபடி என்னிடம் வந்தார். அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க செய்தேன். அதன் பிறகு நடந்த சுதந்திர தினவிழாவில், பங்கேற்க அவர் வந்ததை கண்டு, மனம் நெகிழ்ந்தேன். 2006ல் எனது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இக்கட்டான நிலையில், டாக்டர் என்ற முறையில் அவசரமாக செயல்பட்டு நின்ற நாடித்துடிப்பை மீட்டு, காப்பாற்றியது மறக்க முடியாத சம்பவம்.
* ஆர்.பாத்திமா (மகப்பேறு நிபுணர், ராமநாதபுரம்): கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஏழைகளிடம் சிகிச்சைக்கு பணம் வாங்குவதில்லை. கர்ப்பப்பையில் கட்டியுடன் வந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தேன். தொப்புள் கொடி சுற்றிய நிலையில், குழந்தை வெளியே வர அப்பெண் மிகவும் சிரமப்பட்டார். நெருக்கடியான நேரத்தில் ஒருவழியாக குழந்தையை உயிருடன் மீட்டேன். தாயும், சேயும் அதன்பின் நன்றாகி விட்டனர். எதிர்காலத்தில் ராமநாதபுரத்தில் அனைத்து நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையிலான மருத்துவமனையை உருவாக்கி, குறைந்த செலவில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
* எஸ்.சபரிராஜா (குழந்தைகள் நல சிறப்பு நிபுணர், சிவகங்கை): டாக்டர் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் உண்டு. கிளினிக்கில் இருந்த போது, ஒரு வயது குழந்தை அருகில் இருந்த பூச்சி மருந்தை அறியாமல் குடித்திருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். அக்குழந்தையின் கண்கள் இரண்டும் மூடிய நிலையில் இருந்தது. குழந்தையை அழைத்து வந்த 108 ஆம்புலன்சில், விஷத்தை முறிக்க"அட்ரோபைன்' ஊசி மருந்து போதுமான அளவு இருந்தது. அந்த மருந்தை குழந்தைக்கு செலுத்தினேன். அதற்கு பின் குழந்தை கொஞ்சம் தெளிவானது. பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்தனர். சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பேசி, இலவசமாக மதுரை அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல, அனுமதி பெற்றேன். அங்கு குழந்தை பிழைத்துக் கொண்டது. குழந்தைகள் கைக்கு எட்டும் வகையில், எந்த பொருளையும் வைக்கக்கூடாது. சிவகங்கையில் குழந்தைகள் சிகிச்சைக்கு 24 மணி நேர கிளினிக் இல்லை. அதை விரைவில் துவக்க உள்ளேன்.
* எஸ்.எம்.ரத்தினவேல், (சர்க்கரை நோய் நிபுணர், விருதுநகர்): நான் 31 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் நடந்த பொருட்காட்சி அரங்கில் ராட்டினம் உடைந்து விழுந்தது. இரவு 12.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் 23 பேர் உயிருக்கு போராடினர். அரசு மருத்துவமனைக்கு, ஏழு தனியார் டாக்டர்கள் சென்று ஒருங்கிணைந்து பணியாற்றி முதலுதவி சிகிச்சை வழங்கி, மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பினோம். அனைவரும் உயிர் பிழைத்தனர். இதை என்னால் மறக்க முடியாது. எனது இரு மகன்களும் டாக்டர் ஒருவர் குழந்தைகள் நலப்பிரிவும், இருதய சிகிச்சை பிரிவுக்கும் மேல் படிப்பு படிக்கின்றனர். விருதுநகரில் ஏழைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்பாடு செய்து வருகிறேன்.
எப்படி இருக்க வேண்டும் டாக்டர்கள்
டாக்டர்கள் மருத்துவத்துறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென, டாக்டர்கள் சொன்ன "டிப்ஸ்':
* மனிதாபிமானத்துடன், நேர்மையாக நடக்க வேண்டும்.
* கமிஷனுக்காக, தேவையற்ற மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன் எடுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* கட்டணம் குறைவாக வாங்கிக் கொண்டு, அதிக விலையுள்ள மருந்துகளை எழுதி தரக்கூடாது.
* பணமில்லாத ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க தயங்கக்கூடாது. இது தெய்வத்திற்கு செய்யும் சேவைக்கு சமம்.
- நமது நிருபர் குழு -
--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ
http://manikandanpharmacist.blogspot.com/