பிறந்து ஒரு மாதம் வரை குழந்தை பராமரிப்பு குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அபாய அறிகுறிகள் குறித்தும் விளக்குகிறார் கோவை குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குமரன். ''ஒரு தாய் அணு அணுவாக ரசித்து, விரும்பிப் பெற்றுக்கொள்வதாக குழந்தை இருக்க வேண்டும். அப்போதுதான் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். ரத்த விருத்தி, கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால், பிரசவத்துக்குப் பின் தாய்க்கும் குழந்தைக்கும் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் இது அவசியம். நார்மல் டெலிவரி முடிந்து, ஒரு மாதம் ஆன பிறகு வயிற்றுப்பகுதி பெருத்து விடுவதைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தாய்மைக் காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். காம்பில் அடைப்பு இருக்கிறதா எனப் பார்த்து நிப்பிள் பயிற்சி செய்வது அவசியம். பால் கொடுக்கும் முறையை 'லேட்சிங் ஆன்' என்கிறோம். மார்பை எடுத்து குழந்தையின் வாயில் கொடுக்க வேண்டும். கீழ் உதட்டில் படும்படி காம்பு இருக்க வேண்டும். காம்பைச் சுற்றி இருக்கும் கருவளையம் 'ஏரியோலா' எனப்படுகிறது.
காம்புடன் ஏரியோலாவையும் குழந்தையின் உதடுகள் தொட்டுப் பிடித்துச் சப்ப வேண்டும். காம்பை மட்டும் சப்பினால் பால் சுரப்பு அதிகரிக்காது. பாலோடு குழந்தை சிறிது காற்றையும் உள் இழுக்கிறது. பால் குடித்து முடித்த பின், தோளில் போட்டு முதுகுப் பக்கத்தை நீவிக் கொடுத்தால் ஏப்பம் விடும்... அந்தக் காற்று ரிலீஸ் ஆகும். ஒரு மாதத்துக்கு தாய்ப்பால் தவிர தண்ணீர்கூட குழந்தைக்குத் தேவையில்லை. புட்டியில் எளிதாக சப்பினாலே பால் கிடைத்து விடும். தாய்ப்பாலுக்கு குழந்தை நிறைய உழைக்க வேண்டும். இதனால் குழந்தை புட்டிப்பாலுக்குப் பழகி விடும். பால் சுரப்பும் குறைந்து விடும். 6 மாதத்துக்குப் பின் மற்ற பால் சேர்த்தாலும், கப், ஸ்பூனிலேயே கொடுக்க வேண்டும். ஒன்றரை வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் ஆரோக்கியமானதே. அதிக மாதங்கள் தாய்ப்பால் குடிக்கும்போது தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு அதிகமாக இருக்கும்.
குழந்தை பனிக்குடத்தில் இருந்த போது 'வர்னிக்கல் காசியோசா' என்ற மாவு போன்ற படலம் ஒட்டியிருக்கும்.
அது தோலுக்குப் பாதுகாப்பு அளிப்பதால் முதலில் 'ஸ்பாஞ்ச் பாத்' செய்யப்படுகிறது. குழந்தையின் தொப்புள்கொடி விழும் வரை 'டவல் பாத்' எடுக்க வேண்டும். பின்னர் டப்பில் குழந்தையை வைத்து தாயே குளிப்பாட்டலாம். குளித்த பின் உடலில் உள்ள ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். பவுடர் தேவையில்லை. சாம்பிராணி, தூபம் ஆகியவையும் தேவையில்லை. துவளைப்பொடி, பயத்தமாவு ஆகியவையும் கூடாது. குழந்தைகளுக்கான மென் சருமத்தை பாதிக்காத வகையில் குளியல் இருக்க வேண்டும். தொப்புள்கொடி 5 - 10 நாட்களில் விழுந்து விடும். அது வரை, டவல் பாத்துக்கு பிறகு, தொப்புள் பகுதியில் காட்டனில் ஸ்பிரிட் மட்டும் தொட்டு துடைக்க வேண்டும். ஆயின்மென்ட் தேவையில்லை. குழந்தை பிறந்து 24 முதல் 48 மணி நேரத்துக்குள் சிறுநீர் கழிக்க வேண்டும். ஃப்ளோ நன்றாக இருக்க வேண்டும். விட்டு விட்டுப் போதல், சொட்டு சொட்டாகப் போதல், யூரின் போகும் போது அழுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் மூத்திரப்பையில் யூரின் சேரும் போது குழந்தைகள் அழலாம்.
யூரின் போன பின்னர் ஈரம் ஆனதற்காக அழலாம். இது சாதாரணம். முக்கியபடியே அழுதால் மருத்துவரிடம் கொண்டு வரவேண்டும்.
ஒரு வாரத்தில் குழந்தையின் மலம் மெல்ல நிறம் மாறி முட்டையின் மஞ்சள்கரு போன்ற பொன் மஞ்சளுக்கு மாறும். சந்தனம் போல மாறிவிட்டால் பயப்படத் தேவையில்லை. வெளிறிய நிறத்தில் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இது வயிற்றுப்போக்கு கிடையாது. ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறையும் கழிக்க வாய்ப்புள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படாத வரை எந்தப் பிரச்னையும் இல்லை. 60 சதவிகிதம் பச்சிளம் குழந்தைகளுக்கு காமாலை வருகிறது. இது அடுத்த சில நாட்களில் சரியாகி விடும். ஆனால், கை, கால், பாதம், கண்கள், உடல் அதிக மஞ்சளாகத் தென்பட்டாலும் பல நாட்களுக்கு காமாலை தொடர்ந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
ஒரு மாத குழந்தைகளுக்கு சளித்தொல்லை இல்லாமல் மூக்கடைப்பு ஏற்படலாம். மூக்கொழுகல் இன்றி ஏற்படும் மூக்கடைப்புக்கு நார்மல் சலைன் இரண்டு சொட்டு விட்டால் போதும். சரியாகி விடும். மூக்கடைத்துக் கொண்டால் வாயில் மூச்சு விடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்காது. பால் குடிக்கும் போதும் மூச்சுவிட சிரமப்படும். மூக்கடைப்பு இருந்தால் பால் கொடுப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மூக்கில் சொட்டு மருந்து விட வேண்டும். சில அபாய அறிகுறிகளும் உள்ளன. 24 மணி நேரத்துக்கு மேல் மலம் வராமல் இருத்தல், 48 மணி நேரத்துக்கு மேல் சிறுநீர் போகாமல் இருத்தல், ஒரு வாரத்துக்கு மேல் தொடரும் காமாலை, நன்றாகப் பால் குடித்து தூங்கும் குழந்தையிடம் காணப்படும் பழக்க மாற்றம், தூங்க சிரமப்
படுதல், 2 - 3 மணி நேரத்துக்கு மேல் தூங்குதல், பால் குடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சமாதானப்படுத்த முடியாத அழுகை, மூச்சு விட சிரமப்படுதல், சிறுநீர், மலம் கழிக்கும் போது சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்த பின், முதல் 15 நாட்களில் அதன் ஆரோக்கியம் குறித்து டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். பிறந்தவுடன் முதல் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைட்டிஸ் 'பி' முதல் டோஸ், பிசிஜி காசநோய் தடுப்பு மருந்து ஆகியவை போடப்பட வேண்டும்.
பிறந்து ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்தான் அதன் மொழி. பார்க்கவும் பேசவும் தெரியாத அந்தப் பிஞ்சை கண்ணும் கருத்துமாக கவனிப்பதன் மூலம் மட்டுமே அதன் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்கிறார் டாக்டர் நந்தினி குமரன்.
ஆசை ஆசையாய் பால் குடித்துவிட்டு அயர்ந்து உறங்கும் அந்த விழிகள் ஒவ்வொரு முறை விழிக்கும் போதும் புதிதாக மலர்கிறது. தூங்கும்போது அந்த இரண்டு விழி மொட்டுகளுக்குள் கனவின் விசும்பல் மெல்ல நிகழ்கிறது!
Source http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1520&cat=500
No comments:
Post a Comment