குன்றுகள் எங்கெங்கு உள்ளதோ அங்கு எல்லாம் குமரன் இருப்பான் என கூறுவார்கள். அந்த வகையில் அமைந்ததுதான் குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில். கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலவாய்க்கால் பகுதியில் இந்த மலைக்குன்று அமைந்துள்ளது.
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மலையின் உச்சியில் சுமார் 120 அடி உயரத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக இந்த குன்றின் மீது அழைத்து வருவார்கள். அப்போது பசுக்கள் அங்குள்ள சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிசயத்தைத் தொடர்ந்து அந்த ஊர்மக்கள் அந்த சிவலிங்கத்திற்கு தினமும் பூஜைகள் செய்து வந்தனர்.
இந்தநிலையில், 1940-ம் ஆண்டு கோபி சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை பெய்யாததால் மக்கள் துன்பத்திற்கு உள்ளாகினர். அப்போது மழை பெய்ய வேண்டி லவாய்க்கால் ஊர் பொதுமக்கள் மலை மேல் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வந்தனர். அதன் பயனாக சில நாட்களில் மழை பெய்து வறட்சி நீங்கியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, வறட்சி நிலவும் போதெல்லாம் இந்தப்பகுதி மக்கள் அடிக்கடி இந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வந்தனர். சிவலிங்கத்தின் மீதும் அளவு கடந்த பக்தி கொண்டனர்.
அதனால் மலைமேல் கோவில் அமைக்க முடிவு செய்து 1950-ம் ஆண்டு குமார சுப்பிரமணியசாமி கோவிலை அமைத்து கும்பாபிஷேகமும் செய்தனர். தற்போது அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான தம்பதியர் இங்கு வந்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment