Tuesday, December 31, 2013

சிறுதானியம்; பெரும்பயன்

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு மருந்துகளையே உணவாகப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே.
பீட்சா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் உள்ளிட்ட அயல்நாட்டு உடனடி உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்கு உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவது போன்றவை முக்கிய காரணங்கள்.
இவ்வகை உணவுகளில் அதிகளவிலான ரசாயன உப்பு, ரசாயன கலவைகள், செயற்கையான இனிப்பு, கொழுப்பு வகைகள் உள்ளிட்டவை கலந்துள்ளன. தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட விரும்பி, மாற்று உணவுகளை தேடிப்போன மனிதன் இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களைச் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே உணவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, கொழுப்புச்சத்து குறையவும், உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாகிறது.
சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு, இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுமே உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. கோதுமையை விட சிறுதானியங்களில் 10 சதவீதம் சர்க்கரை சத்து குறைவு; நார்ச்சத்து அதிகம்.
ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதியில்லாத ஏழை, எளிய மக்களின் உணவாக விளங்கிய சிறுதானியங்களின் விலை இன்று பன்மடங்கு உயர்ந்து வசதி படைத்தவர்களின் உணவாக விளங்குகிறது.
பொதுவாக சிறுதானியங்களில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்பு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தானியங்களிலேயே அதிக சத்து வாய்ந்த கேழ்வரகானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் சூட்டினை சமநிலையில் வைத்திருத்தல், குடலுக்கு வலிமையளித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.
இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள வரகை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையவும், மாத விடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு உடல் நலனை சீராக்கிக் கொள்ளவும் பயனாக அமைகிறது.
செரிமான சக்தியை அதிகரித்து உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருப்பது, வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைப்பது போன்ற தன்மை கம்புக்கு உண்டு. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்து அவர்களின் உடல் வலிமையையும் கூடுதலாக்குகிறது.
வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, ஆகியவற்றுக்கு ஏற்ற உணவான சாமை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாமை உணவை சமைத்து உண்ணலாம்.
உடலுக்கு உறுதியை அளிக்கும் வல்லமையுடைய சோளம் உடல் பருமன், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய உணவான சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
சிறுதானியங்களின் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள அரசும் அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால் அவற்றின் விலை குறைந்து அனைவரும் பயன்படுத்த வழி ஏற்படும்

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு' என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

கொள்ளின் பலன்கள்

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது. அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன் குன்யா நோய் பாதித்த வர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து  இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும்  கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.